மணல் கடத்தல் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் கிரண்பெடி ஆலோசனை


மணல் கடத்தல் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் கிரண்பெடி ஆலோசனை
x
தினத்தந்தி 15 May 2018 10:51 PM GMT (Updated: 15 May 2018 10:51 PM GMT)

மணல் கடத்தல் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள ஆறுகளில் இருந்து அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மணல் கடத்தல் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது.

மணல் திருட்டு மற்றும் கடத்தலுக்கு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் மணல் கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக அதிகாரி ஒருவர் செயல்படுவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின.

இதைத்தொடர்ந்து அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அதன்படி துணை தாசில்தார் ராமச்சந்திரன் என்பவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி நேற்று தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை செயலாளர் தேவேஷ் சிங், போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐ.ஜி. சுரேந்திர யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனையின்போது திருட்டுத்தனமாக மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். 

Next Story