புழல் காவாங்கரையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவிக்கும் தாமரை குளம்


புழல் காவாங்கரையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவிக்கும் தாமரை குளம்
x
தினத்தந்தி 16 May 2018 4:25 AM IST (Updated: 16 May 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

புழல் காவாங்கரையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவித்து வரும் குளத்தை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்குன்றம்,

சென்னையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளது புழல் காவாங்கரை. இங்கு உள்ள வண்ணங்குளம் எனப்படும் தாமரைகுளத்தை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

குளம் தண்ணீரால் நிரம்பி இருக்கும் வேளையில் பொதுமக்கள் அந்த நீரை துணி துவைத்தல், ஈமசடங்குகளை செய்தல், ஆடு, மாடுகளுக்கு குடிக்க பயன்படுத்தல் போன்றவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்படி பொதுமக்களுக்கு பல்வேறு பயன்களை அளித்து வந்த குளத்தை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பால் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு இருந்த குளம் தற்போது வெறும் 2 ஏக்கராக குறுகி பரிதாப நிலையில் உள்ளது. மேலும், மனிதர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ஆகாய தாமரை செடிகளும் தங்களது பங்கிற்கு குளத்தை ஆக்கிரமித்துள்ளதால் தற்போது எந்தவித பயன்பாடுமின்றி பெயரளவுக்கு மட்டுமே குளமாக காட்சியளித்து வருகிறது.

குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது குறித்து தி.மு.க. ஆட்சி காலத்திலேயே அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் நேரடியாக மனு கொடுத்து குளத்தை சீரமைக்க முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான் வரும் நாங்கள் தலையிட முடியாது என வருவாய்த்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி பொறுப்பினை தட்டிக்கழித்து வருகின்றனர்.

விடிவுகாலம் பிறக்கும
மேலும், குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முதல்-அமைச்சரிடம் நேரடியாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள தாமரை குளத்திற்கு விடிவு காலம் பிறக்குமா? அதிகாரிகள் தங்களது கடைக்கண் பார்வையை குளத்தின் மீது பதித்து குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story