மானாமதுரை அருகே வனத்துறையினர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


மானாமதுரை அருகே வனத்துறையினர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 May 2018 11:05 PM GMT (Updated: 15 May 2018 11:05 PM GMT)

மானாமதுரை அருகே வனத்துறையினர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர், மஞ்சிக்குளம், நெடுங்குளம் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மழையை நம்பி தங்களது தோட்டங்களில் மல்லிகை செடிகள், நெல், கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கிராம எல்லையையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பெய்யும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதற்காக வரத்து கால்வாய் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் இப்பகுதியில் 1 லட்சத்திற்கும் மேல் தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் அரசு புறம்போக்கு நிலங்களில் டிராக்டர் மூலம் வனத்துறையினர் புதிய வாய்க்கால்களை உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்த 5 கிராமங்களை சேர்ந்த மக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்து வரத்து கால்வாய் அருகே மழை நீரை தேக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர். மேலும் இது சம்பந்தமாக மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்திலும் வனத்துறையினர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.

இந்நிலையில் தற்போது வனத்துறையினர் இந்த சமாதான உடன்படிக்கையை மீறி நேற்று இந்த பகுதியில் டிராக்டர் மூலம் வாய்க்கால் உருவாக்கும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி கிராம மக்கள் அங்கு சென்று போராட்டம் நடத்திய பின்னர் அங்கு நடைபெற்ற பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முருகன் என்பவர் கூறியதாவது:-

மானாமதுரையை அடுத்த செய்களத்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி கிராம மக்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயத்தை முற்றிலும் முடக்கும் வகையில் வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு இப்பகுதியில் விதிகளை மீறி தைல மரங்களை நடவு செய்தது மட்டுமல்லாமல் சொந்தமாக டிராக்டர் வைத்திருப்பதால் அதன் மூலம் வாய்க்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story