மாவட்ட செய்திகள்

சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை + "||" + On the roadside Request to remove silly trees

சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை

சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை
வியாசர்பாடி பகுதியில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தின் கிளைகள் திடீரென முறிந்து விழுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்றி விட்டு, அந்த இடத்தில் புதிய மரக் கன்றுகளை நடவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதிகளில் சாலை ஓரங்களிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல் அதில் சில மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்து, பட்டுப்போன நிலையில் வெறும் கிளைகளுடன் காட்சி அளிக்கிறது.


குறிப்பாக எம்.கே.பி. நகரின் முக்கிய சாலையான மத்திய நிழற்சாலை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, எம்.கே.பி. நகர் 8-வது குறுக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல் பெரிய அளவிலான மரங்கள் காய்ந்து, உயிரற்ற நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.

காற்று பலமாக வீசும் போது இந்த மரக்கிளைகள் திடீரென முறிந்து சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை தகவல் தெரிவித்தும் காய்ந்து போன மரங்களை பராமரிக்கவோ, வெட்டி அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெடுஞ்சாலை ஓரங்களிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் உள்ள பல மரங்கள் பராமரிக்கப்படாமல் காய்ந்து போய் உள்ளதை அரசு அதிகாரிகள் கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

இனியாவது மரங்களை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். இனி தண்ணீர் ஊற்றி பராமரித்தாலும் பயன்தராத பட்டுப்போன நிலையில் உள்ள காய்ந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, அதற்கு பதிலாக அதன் அருகிலேயே புதிதாக மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.