மருதூரில் மின்சாரம் துண்டிப்பு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


மருதூரில் மின்சாரம் துண்டிப்பு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 11:14 PM GMT (Updated: 16 May 2018 12:21 AM GMT)

மேலூர் அருகே மருதூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

மேலூர்,

மேலூர் அருகே திருவாதவூரை அடுத்துள்ளது மருதூர் கிராமம். இங்கு கடந்த 7 நாட்களாக மின்சாரம் வினியோகிக்கப்படவில்லையாம். இதனால் கிராம மக்கள் தங்களின் வீடுகளில் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமலும், அத்தியாவசியமான குடிதண்ணீர் கிடைக்காமலும் சிரமப்பட்டனர். மேலும் இரவில் கிராமமே இருளில் மூழ்கியதால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின் வாரிய ஊழியர்களிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மருதூருக்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து, காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தொடர்ந்து 7 நாட்கள் மின்சாரம் இல்லாததால் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகிறோம். இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருவாதவூர், கட்டயன்பட்டி, பூஞ்சுத்தி, கொட்டக்குடி உள்ளிட்ட 26 கிராமங்களுக்கு ஒரே ஒரு வயர்மேன் மட்டுமே உள்ளார்.

5 வயர்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் ஒருவர் மட்டுமே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார பழுது பணிக்கு செல்வதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

Next Story