பால்கர், பண்டாரா-கோண்டியா: 2 நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 25 பேர் போட்டி


பால்கர், பண்டாரா-கோண்டியா: 2 நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 25 பேர் போட்டி
x
தினத்தந்தி 15 May 2018 11:22 PM GMT (Updated: 2018-05-16T04:52:49+05:30)

பால்கர் மற்றும் பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

மும்பை,

பால்கர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான சிந்தாமன் வாங்கா(பா.ஜனதா) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பண்டாரா-கோண்டியா தொகுதி எம்.பி. நானா பட்டோலே பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் மேற்கண்ட 2 தொகுதிகளும் காலியாகின.

இரு தொகுதிகளில் வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி அமைத்தனர். இதன்படி பண்டாரா-கோண்டியாவில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மதுக்கர் குக்டேயும், பால்கரில் காங்கிரஸ் சார்பில் தாமோதர் ஷிங்டேவும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

பண்டாரா-கோண்டியாவில் பா.ஜனதா சார்பில் ஹேமந்த் பட்லே வேட்புமனு தாக்கல் செய்தார். இதேநேரத்தில் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா-சிவசேனா இடையே பால்கர் தொகுதியில் மோதல் ஏற்பட்டது. மறைந்த சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா சிவசேனா தரப்பில் பால்கரில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காங்கிரசில் இருந்து விலகிய ராஜேந்திர கவித்தை பால்கரில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

இந்த நிலையில் இரு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. அதன்படி பால்கர் மற்றும் பண்டாரா-கோண்டியா ஆகிய இரு தொகுதிகளிலும் முறையே 7 மற்றும் 18 பேர் என மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பால்கர் தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் விகாஸ் அகாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.

இதேபோல பண்டாரா-கோண்டியாவில் பிரதான கட்சிகளை தவிர்த்து 8 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு சவாலாக அமைந்து உள்ளது. பால்கர் தொகுதியில் கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் நேருக்கு நேர் மோதும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதால், தேர்தல் பிரசாரம் தொடங்கி அனல் பறக்க உள்ளது. 

Next Story