குடிநீர் வினியோக பணியில் அதிகாரிகள் மெத்தனம்: எம்.எல்.ஏ. கண்டிப்பு


குடிநீர் வினியோக பணியில் அதிகாரிகள் மெத்தனம்: எம்.எல்.ஏ. கண்டிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 4:53 AM IST (Updated: 16 May 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. கண்டித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளின் தண்ணீர் தேவையை தீர்த்துவரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் அடங்கியுள்ள கிராமங்களில் திருப்திகரமாக தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் நகரில் வாரத்துக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்த இடைவெளி அதிகரித்து 15 நாட்களுக்கு ஒருமுறையே குழாயில் தண்ணீர் வருகிறது.

தண்ணீரின்றி தவிக்கும் பொது மக்கள் சந்திரபிரபா எம்.எல்.ஏ.யிடம் இதுகுறித்து முறையிட்டனர். 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்ததை தொடர்ந்து அவர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் ஆணையர் முகமது முகைதீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

யூனியன் பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி நகராட்சி பகுதியில் அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்வதாக எம்.எல்.ஏ. கூறினார். அதிகாரிகளின் போக்கை கண்டித்த அவர், குடிநீர் வினியோகத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 

Next Story