ஓட்டேரியில் அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது


ஓட்டேரியில்  அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது
x
தினத்தந்தி 16 May 2018 4:58 AM IST (Updated: 16 May 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

திரு.வி.க நகர்,

சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் நியூ காலனியை சேர்ந்தவர் செல்வி (வயது 29). இவர் நேற்று ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலையிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது.

ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (50), சியாமளா (42) தம்பதியினரிடம் மாதத்தவணை முறையில் பண்டு சீட்டுக்கு பணம் கட்டி வந்தேன். நான் தெரிவித்ததன் காரணமாக எனக்கு தெரிந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தம்பதியினரிடம் பண்டு சீட்டு மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தினார்கள்.

பண்டு சீட்டு பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட நாட்கள் முடிந்த நிலையில் எங்களிடம் இருந்து பணம் பெற்ற செல்வராஜ் மற்றும் சியாமளா பணத்தை திருப்பி தராமல் கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். என்னை நம்பி அவர்களிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை வாங்கி தரும்படி என்னை தொந்தரவு செய்கின்றனர். எனவே பண்டு சீட்டு பணம் மோசடி செய்த செல்வராஜ் மற்றும் சியாமளா தம்பதியினரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் செல்வராஜ், சியாமளாவிடம் பண்டு சீட்டு பணம் கட்டிய 50 பேர் தங்களுக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜ், சியாமளாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது இருவரும் பணம் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் செல்வராஜ் போலீசாரிடம் கூறியதாவது.

பெரம்பூர் பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி சியாமளா மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். எங்களது வீட்டின் அருகே உள்ள 51 பேரிடம் பண்டு சீட்டு நடத்தி மாதம் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.900 வீதம் என மொத்தம் ரூ.35 லட்சம் வரை வசூல் செய்தோம்.

வட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு சீட்டுப்பணத்தில் வசூலான தொகையை மற்றவர்களிடம் வட்டிக்கு கொடுத்தோம். ஆனால் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வட்டியையும், அசலையும் எங்களுக்கு திருப்பி தரவில்லை. அதனால் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு எங்களால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சீட்டு பணம் கட்டிய ரசீதின் அடிப்படையில் செல்வராஜ், சியாமளாவை போலீசார் கைது செய்தனர்.

Next Story