குப்பிநாயக்கன்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குப்பிநாயக்கன்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2018 11:30 PM GMT (Updated: 2018-05-16T05:00:13+05:30)

குப்பிநாயக்கன்பட்டியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டமனூர்,

கண்டமனூர் அருகே உள்ளது குப்பிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மழை இல்லாமல் கடுமையாக வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் மானாவாரியாக தரிசுகளாக உள்ளன. தீவனம் இல்லாமல் சில கிலோமீட்டர் தூரம் மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஒட்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீருக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட 6 ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போய் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு ஆழ்துளை கிணறு மூலம் மட்டுமே 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக வெகுதூரம் நடந்து சென்று ஒரு சில தோட்டங்களில் இருந்து தண்ணீர் சுமந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தூர்ந்து போன ஆழ்துளை கிணறுகளை தூர்வாரியும், புதியதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என்றும் குப்பிநாயக்கன்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story