பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2018 5:01 AM IST (Updated: 16 May 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே பனியன் நிறுவன பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை பிரிந்த ஏக்கத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர் மாவட்டம் அத்தப்பன்கவுண்டன்வலசை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). விவசாயி. இவருடைய மனைவி சோபியா (25). இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோபியா தனது கணவரை விட்டு பிரிந்து, மகன் சந்தோசுடன், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தனது அக்காள் சுகந்தி வீட்டிற்கு சென்று விட்டார்.

அங்கு சில மாதங்கள் தங்கி இருந்த சோபியா கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தாமரைபாளையத்தை சேர்ந்த ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் சோபியா தனது 2-வது கணவர் மற்றும் மகனுடன் தலைமறைவானார்.

இதையடுத்து சோபியாவியின் முதல் கணவர் முருகேசன், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று கரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சோபியாவை கண்டு பிடித்து போலீசார் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதற்கிடையில் முதல் கணவருக்கு தெரியாமல் சட்டத்திற்கு புறம்பாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக சோபியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையில் சோபியாவுடன் தனது மகன் சந்தோஷ் இருக்கக்கூடாது என்றும், அவனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முருகேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சந்தோசை முருகேசனுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முருகேசனுடன் சந்தோஷ் அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வசித்து வந்த சுகந்தி, திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை வெள்ளியம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இதற்கிடையில் 2-வது கணவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோபியா அவரையும் விட்டு பிரிந்து வெள்ளியம்பாளையத்தில் உள்ள தனது அக்காள் சுகந்தி வீட்டிற்கு வந்தார். அங்கு கடந்த 2 ஆண்டாக தங்கி இருந்த சோபியா, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனாலும் மகனை பிரிந்து இருந்ததால் மன வேதனை அடைந்தார். இது குறித்து தனது அக்காளிடம் பலமுறை தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக வேலைக்குப்போகாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பிடிக்க சுகந்தி சென்று விட்டார். இதனால் சோபியா மட்டும் தனியாக இருந்தார். பின்னர் தண்ணீர் பிடித்துக்கொண்டு சுகந்தி வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து வீட்டின் கதவை சுகந்தி தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. அப்போது ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது வீட்டினுள் சோபியா தூக்கில் தொங்குவதை பார்த்து சுகந்தி அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சோபியாவை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சோபியாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இது தொடர்பாக தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஸ் பச்சாவு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story