என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி


என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2018 11:43 PM GMT (Updated: 15 May 2018 11:43 PM GMT)

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நெய்வேலியில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.

நெய்வேலி,

சி.ஐ.டி.யு. மாநில செயற்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில உதவி பொதுச்செயலாளர்கள் குமார், திருமலையான், துணைத்தலைவர் சிங்காரவேலு, நிர்வாகிகள் திருச்செல்வம், கோபி குமார், மாவட்ட தலைவர் பாஸ்கர், செயலாளர் கருப்பையன், என்.எல்.சி. சி.ஐ.டி.யு. தலைவர் வேல்முருகன், பொதுச்செயலாளர் ஜெயராமன், அலுவலக செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் உரிமை பறிப்பு, கட்டாய நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து வருகிற 23-ந் தேதி தமிழக மக்கள் மேடை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ச்சியாக தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பறித்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது போன்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து செப்டம்பர் மாதம் 5-ந் தேதி டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரணியில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வோம்.

என்.எல்.சி.யின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பது, சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக செயல்பட்டு வரும் சூழ்நிலையில் சுரங்க பகுதிகளில் மேல்மண் வெட்டி எடுப்பது உள்ளிட்ட நிரந்தர தன்மையுள்ள வேலைகளை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதை கைவிட வேண்டும்.

என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள், ஊழியர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி, நியாயமான ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி.யில் பணிபுரியும் இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பணியின்போது இறந்தவர்களின் வாரிசு, வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்.எல்.சி.யில் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story