உத்திரமேரூர் அருகே வாலிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது


உத்திரமேரூர் அருகே வாலிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2018 5:14 AM IST (Updated: 16 May 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே வாலிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் காலனியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 23). இவர் கடந்த 3-ந் தேதி நண்பர் திருமணத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவரை கடத்தி வைத்த மர்மநபர்கள் ரூ.15 லட்சம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து போலீசிலோ அல்லது மற்றவர்களிடம் தெரிவித்தாலோ மகனை உயிருடன் பார்க்க முடியாது என்று அவரது பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேஷின் தந்தை முனியப்பன் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டுக்கு திரும்பி வந்த ராஜேஷ் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னை சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (23), கட்டியாம்பந்தல் பகுதியை சேர்ந்த வீரமுத்து (23) ஆகியோர் கள்ளு குடிக்க செல்லலாம் என்று கூறி அழைத்து சென்று திடீரென்று முகத்தில் அடித்து காயப்படுத்தி, அங்கு வந்த ஒரு காரில் கடத்தி சென்றதாகவும், அந்த காரில் மேலும் 3 பேர் இருந்தார்கள் என்றும், தான் அணிந்திருந்த நகை மற்றும் தன்னுடைய ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.10 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டனர். இவ்வாறு போலீசில் புகார் கூறினார்.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தீவிர விசாரணை மேற்கொண்டு வீரமுத்துவை கைது செய்தார். வீரமுத்து கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உத்திரமேரூர் அடுத்த ஒழையூரை சேர்ந்த மகரஜோதி (22) என்பவரையும் கைது செய்தார்.

மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக ராஜேஷை கடத்தியதை ஒப்புகொண்டனர். கைது செய்யப்பட்ட வீரமுத்து, மகரஜோதியை போலீசார் உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் தலைமைறைவாக உள்ள மல்லிகாபுரம் சுதீஷ் (23), நெல்வாய் பிரகாஷ் (23), சின்னமாங்குளம் புருஷோத்தமன் (23) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story