ரேஷன் கடையில் புழுங்கல் அரிசியை குறைக்காமல் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ரேஷன் கடையில் புழுங்கல் அரிசியை குறைக்காமல் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2018 11:48 PM GMT (Updated: 15 May 2018 11:48 PM GMT)

வடமதுரை அருகே ரேஷன் கடையில் புழுங்கல் அரிசியை குறைகாகாமல் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சிக்குட்பட்ட காடையனூரில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. கடந்த சில மாதங்களாக காடையனூர் ரேஷன் கடையில் புழுங்கல் அரிசியின் அளவை குறைத்து, பச்சை அரிசி அதிகமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு குடும்ப அட்டை தாரருக்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசியில், 15 கிலோ பச்சை அரிசியும், 5 கிலோ புழுங்கல் அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த அரிசியிலும் கல், மணல், எலியின் எச்சம் உள்ளிட்ட குப்பைகள் கலந்துள்ளதால் பொதுமக்கள் அந்த அரிசியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த காடையனூர், மம்மானியூர், ஊரானூர் பகுதி பொதுமக்கள் சுமார் 100 பேர் நேற்று காலை 10 மணியளவில் கொம்பேறிபட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், வேடசந்தூர் தனி வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ரேஷன் கடையில் சுத்தமான அரிசி வழங்கப்படுவதில்லை என்றும், மேலும் ரேஷன் கடையில் பின்பக்க கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட் கள் திருடப்பட்டு வருவதாகவும் புகார் செய்தனர். இதையடுத்து தரமற்ற அரிசி மூட்டைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பவும், சுத்தமான அரிசியை பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யுமாறும் ரேஷன் கடை ஊழியருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், புழுங்கல் அரிசி குறைக் காமல் வழங்கப் படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story