கர்நாடக கவர்னர் குறித்து ருசிகர தகவல்


கர்நாடக கவர்னர் குறித்து ருசிகர தகவல்
x
தினத்தந்தி 16 May 2018 5:20 AM IST (Updated: 16 May 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா.

ஆமதாபாத்,

கர்நாடக தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்திருப்பதால் தற்போது அனைவரின் கவனமும் மாநில கவர்னர் வஜூபாய் வாலா எடுக்கும் முடிவுகளை நோக்கி திரும்பி இருக்கிறது.

79 வயது வஜூபாய் வாலா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் குஜராத்தில் பா.ஜனதாவின் ஆட்சியில் 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி என்ற சாதனைக்கும் உரியவர். மோடிக்கு மிக நெருக்கமானவரும் ஆவார்.

2001–ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக குஜராத் முதல்–மந்திரி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 6 மாதத்துக்குள் அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஒரு சில எம்.எல்.ஏ.கள் தங்களது தொகுதியை விட்டுத்தர விரும்பவில்லை.

இந்த நிலையில், வஜூபாய் வாலா தனது எம்.எல்.ஏ. பதவியை(ராஜ்கோட் மேற்கு) ராஜினாமா செய்து மோடி போட்டியிடுவதற்கு வழிவிட்டார். 2002–2012 ஆண்டுகள் இடையே மோடியின் மந்திரிசபையில் 2–வது மந்திரி என்ற அந்தஸ்திலும் இருந்தார். அதற்கு முன்பாக கேசுபாய் பட்டேல் முதல்–மந்திரியாக இருந்தபோதும் இதே நிலையை வகித்துள்ளார்.

தனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். பிறகு ஜனசங்கத்தில் சேர்ந்தார். நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து போராடியதற்காக வஜூபாய் வாலா சிறைக்கும் சென்றுள்ளார்.


Next Story