மாவட்ட செய்திகள்

புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு + "||" + Opposition to build panchayat office in Puliyampatti

புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
குஜிலியம்பாறை அருகே ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி ஊராட்சியில், 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி அலுவலக கட்டிடம் புளியம்பட்டியில் உள்ள மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்தது. இதனால் வடுகம்பாடி ஊராட்சி மக்களும் போக்குவரத்து சிரமமின்றி சென்று வந்தனர்.


இந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது வடுகம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும், புளியம்பட்டியில் கட்டக்கூடாது என்று கூறியும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கட்டிட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊரில் ஊராட்சி அலுவலகம் கட்டக்கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த வடுகம்பாடி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொன்னர், முருகன், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இது பற்றி தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் 4 பேரின் மீதும் தண்ணீரை ஊற்றி அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையே தகவல் அறிந்து குஜிலியம்பாறை ஒன்றிய அதிகாரிகள் முருகன், நாகராஜன் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில், புளியம்பட்டியில் புதிய அலுவலகம் கட்டக் கூடாது என்றும், எங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும் கூறினர். இதற்கு அதிகாரிகள் இந்த பிரச்சினையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட பிறகு பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.