பாளையங்கோட்டையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சி நிறைவு
பாளையங்கோட்டை கலை பண்பாட்டு வளாகத்தில், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், மண்டல அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி நிறைவு விழா நடந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டை கலை பண்பாட்டு வளாகத்தில், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், மண்டல அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி நிறைவு விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அவர், ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘இந்த ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் முதல்முறையாக பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் பங்கேற்று உள்ளனர். இதுபோன்ற கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், மாணவ–மாணவிகள் புதிய பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியை நடத்தவும், அதிக நாட்கள் நடத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கண்காட்சியின்போது ஆர்வமுள்ள மாணவ–மாணவிகளுக்கு சிறிய பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
நிகழ்ச்சியில், மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் சுந்தர், அவ்வை நுண்கலை கல்லூரி முதல்வர் சந்துரு, நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சத்யவதி, சிற்பி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.