கோடை வெயிலை வெல்ல முடியுமா?


கோடை வெயிலை வெல்ல முடியுமா?
x
தினத்தந்தி 16 May 2018 10:13 AM GMT (Updated: 2018-05-16T15:43:22+05:30)

பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மதியம் 2½ மணி அளவில் என்பது கண்டறியப்பட்ட உண்மை.

சுட்டெரிக்கும் கத்திரி வெயில் மூலம் கதிரவன் தன் கோர முகத்தை காட்டி வருகிறான். கத்திரி வெயில் நமக்கு பலபடிப்பினைகளை கற்றுக்கொடுப்பது ஒருபுறம் இருக்க, கோடை காலம், குளிர் காலம் என எவ்வாறு காலநிலை மாறுகிறது? இதற்கான காரணம் என்ன? என்பதை பலரும் அறிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். அவர்கள் விடை காண்பதற்கு இது சரியான தருணம்.

நம்மை சுமந்து நிற்கும் பூமியானது 23½ டிகிரி கோணத்தில் சாய்ந்திருப்பதே காலநிலை மாற்றங்களுக்கு காரணம். பூமி சூரியனை வலம் வருகிறது. பூமி சாய்ந்திருப்பதால் சூரியனின் நேர் கிரகணங்கள் பூமியின் வட அரை கோளத்தில் 6 மாதங்களும், மற்ற 6 மாதங்கள் தெற்கு அரை கோளத்திலும் விழுகின்றன. நமது பகுதியில் சூரியனின் நேர் கிரகணங்கள் விழும் காலத்தை தான் கோடை காலம் அல்லது வேனிற் காலம் என்கிறோம்.

பொதுவாக, வடகிழக்கு பருவ காற்று அக்டோபரில் தொடங்கிய பிறகு நமது தமிழக கடற்கரையில் 6 மாதங்கள் கடல் காற்று கிழக்கில் இருந்து வீசும். மற்ற ஆறு மாதங்களில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். சூரியனின் நேர் கிரகணங்களும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் கோடையில் வெப்பமான சூழலை உருவாக்குகின்றன.

கோடை காலத்தில் காலை நேரத்திலேயே கதிரவனின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் நிலப்பகுதி விரைவில் சூடேறி அங்கு காற்றின் அடர்த்தி குறைகிறது. அதே வேளையில், கடற்பகுதியில் காற்றின் அடர்த்தி அந்த அளவுக்கு குறையாது. ஆகவே குளிர்ந்த கடற் பகுதியிலிருந்து காற்றானது நிலத்தை நோக்கி பாயும். இதையே கடற்காற்று என்கிறோம்.

இதனுடைய தாக்கம் கடற்கரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும். முதலில் கிழக்கிலிருந்து வீசும் காற்று, பூமியின் சுழற்சி காரணமாக தென் கிழக்கு, தெற்கு என திசை மாறும். ஆக, தென் திசையில் ஜன்னல் அல்லது பால்கனி இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் கோடையின் கடுமையில் இருந்து தப்பிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ஜன்னல் எங்கே உள்ளது என்பது முக்கியம்.

பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மதியம் 2½ மணி அளவில் என்பது கண்டறியப்பட்ட உண்மை. அப்போதுதான் உயர்ந்தபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது. கடற்காற்றானது காலை 10.30 மணிக்கு முன் வீச தொடங்கினால் உயர்ந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருக்கும். எந்த அளவுக்கு கடற்காற்று தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறதோ, அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.

அதிலும், சில நாட்களில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றானது வலுவாக இருந்தால், கடற்காற்றே தொடங் காது. அந்த நாட்களில் உயர்ந்தபட்ச வெப்பநிலை 41 அல்லது 42 டிகிரி செல்சியஸ் (அதாவது 105.8 அல்லது 107.6 டிகிரி பாரன்கீட்) என்ற அளவு வரை உயர்ந்துவிடும்.

நமது உடலில் வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்கீட் அல்லது 37.2 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கிறது. இதற்கு அதிகமாக உயர்ந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் பொழுது நாம் கோடையின் கடுமையை உணர்கிறோம்.

சமீப காலங்களில் நகர்மயமாதல் காரணமாக பதிவாகும் வெப்பம் அதிகமாக உள்ளது. இதை காலநிலை மாற்றம் என்கிறோம். இன்று பதிவான உயர்ந்த பட்ச வெப்பம் 39 டிகிரி செல்சியஸ் என்று வைத்துக்கொள்வோம். 30 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் தான் வெப்பநிலை இருந்திருக்கும்.

வெப்பமான கோடையை சமாளிப்பது எப்படி? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்புதான். முடிந்த வரை மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிறத்தில் பருத்தி ஆடை உடுப்பது நலம் பயக்கும். மொட்டை மாடியின் தரைப்பகுதியில் வெள்ளை நிற பூச்சு பூசினால் வெப்பத்தின் கடுமை குறையும். மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தால் வெப்பத்தின் தாக்கம் தளத்தின் கீழ் அமைந்துள்ள பகுதிகளில் குறையும். பழரசங்கள், மோர் போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

புதுப்பிக்கவல்ல எரிசக்தியான காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதன் மூலம் நிலக்கரியின் பயன்பாட்டை குறைக்க முடியும். இது வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும். பொதுவாக, வளர்ச்சி மற்றும் நகர்மயமாதலை தவிர்க்க முடியாது. எனவே, வீட்டின் அண்மையில் மரங்கள் வளர்க்க முடியுமானால், வெப்பத்தை குறைக்க அதைவிட சிறந்த வழி இருக்கவே முடியாது. 


ரமணன், முன்னாள் தமிழக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர்

Next Story