ஆறுமுகநேரி அருகே பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு சிமெண்டு லாரி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 2பேர் காயம்
ஆறுமுகநேரி அருகே பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு சிமெண்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி அருகே பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு சிமெண்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்ததுதூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்தவர் செல்வம். மினி லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவில் மினிலாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு முக்காணியில் இருந்து ஆறுமுகநேரியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆறுமுகநேரி அருகே கடலோர காவல்படை போலீஸ் நிலையம் அருகில் உள்ள சிறிய எட்டுக்கண் பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால் செல்வம் அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க தனது மினிலாரியில் திடீரென பிரேக் பிடித்தார். இதில் மினிலாரி நிலைகுலைந்து, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
2பேர் காயம்இந்த விபத்தில் செல்வம் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த சுமை தூக்கும் தொழிலாளியான, தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் லேசான காயம் அடைந்தார். அந்த 2பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் படுகாயங்களுடன் இருந்த செல்வம் முதலுதவி சிகிச்சைக்கு பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் பள்ளத்தில் சிதறி சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.