மாவட்ட செய்திகள்

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி + "||" + Plus 2 exam results: Kumari district has 95.08 per cent students pass

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தில் 95.08 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மீண்டும் குமரி மாவட்டம் 11–வது இடத்தை தக்க வைத்துள்ளது.
நாகர்கோவில்,

தமிழகத்தில் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவ– மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆவலில் நேற்று காலை 9 மணிக்கு முன்பாகவே தனியார் இணையதள மையங்கள், அரசு இ–சேவை மையங்கள் போன்றவற்றிலும், பள்ளிகளிலும் குவிந்தனர். வசதியுள்ள மாணவ– மாணவிகள் தங்கள் வீடுகளில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகளை பார்த்து அறிந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதேநேரத்தில் 700 மதிப்பெண்களும், 700 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் பெற்ற மாணவ– மாணவிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 58–ம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 64–ம், சுயநிதி பள்ளிகள் 22–ம், மெட்ரிக் பள்ளிகள் 96–ம் ஆக மொத்தம் 240 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 தேர்வை 240 பள்ளிகளை சேர்ந்த 11,128 மாணவர்களும், 13,270 மாணவிகளுமாக மொத்தம் 24,398 பேர் எழுதினர். அவர்களில் 10,197 மாணவர்களும், 13,001 மாணவிகளுமாக மொத்தம் 23,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.63. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.97. ஒட்டுமொத்தமாக 95.08 சதவீத மாணவ– மாணவிகளின் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 7,746 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 7,447 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.

தக்கலை கல்வி மாவட்டத்தில் 8,458 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினர். 8,076 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.48 ஆகும்.

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 8,194 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 7,675 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 93.67 ஆகும்.

இந்த 3 கல்வி மாவட்டங்களில் குறைந்த அளவு மாணவ– மாணவிகள் தேர்வு எழுதிய நாகர்கோவில் கல்வி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல் இடத்தையும், அதிக மாணவ– மாணவிகள் தேர்வு எழுதிய தக்கலை கல்வி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 2–வது இடத்தையும், குழித்துறை கல்வி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 3–வது இடத்தையும் பிடித்துள்ளன.

குமரி வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களைவிட மாணவிகள் 2,804 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மாணவர்களைவிட மாணவிகள் 6.34 சதவீதம் கூடுதலாக வெற்றியை நிலைநாட்டியுள்ளனர்.

தமிழக அளவில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளஸ்–2 மாணவ– மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குமரி மாவட்டம் மீண்டும் 11–வது இடத்தை பிடித்து தக்கவைத்துள்ளது.

கடந்த ஆண்டும் குமரி மாவட்டம் 11–வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டில் 95.75 சதவீதம் மாணவ– மாணவிகளும், 2016–ம் ஆண்டு 95.70 சதவீதம் மாணவ– மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 95.08 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.