தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் 5 அரசுப்பள்ளிகள், கிளை சிறைச்சாலைக்கு உபகரணங்கள்
தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் 5 அரசுப்பள்ளிகள் மற்றும் கிளை சிறைச்சாலைக்கு உபகரணங்களை கலெக்டர் லதா வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து நவீன சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 5 அரசுப்பள்ளிகள் மற்றும் கிளை சிறைச்சாலைக்கு கணினிகள், சட்ட நூல்கள், அலுவலக உபகரணங்கள் வழங்கும் விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் வடிவேலு வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் லதா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வருவாய் அலுவலர் இளங்கோ, முதன்மைக்கல்வி அலுவலா ஆஞ்சலோ இருதயசாமி, மூத்த வக்கீல் மோகனசுந்தரம், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் விழாவில் 5 அரசுப்பள்ளிகள் மற்றும் கிளை சிறைச்சாலைக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கணினிகள், மேசை, பீரோ, நாற்காலிகள், சட்ட நூல்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழாவில் சமூகநலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, துறைகளின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், அவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களிடம் இருந்து 68 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் பரிசீலனைக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் சட்டப்பணிகள் ஆணைய நிர்வாக உதவியாளர் மணிமேகலை நன்றி கூறினார்.