கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2018 10:00 PM GMT (Updated: 16 May 2018 8:05 PM GMT)

பொன்னேரியை அடுத்த மெதூர், பழவேற்காடு உள்பட பல கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்றும் நிலையங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பொன்னேரி,

கோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஒவ்வொரு கிராமத்திலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர்கள், தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து குடிநீர் எடுக்கப்படும் இடம், கீழ்நிலை மேல்நிலை நீரேற்று நிலையங்கள், குடிநீர் தொட்டிகளின் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குடிநீர் குறித்து குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட தலைமை நிர்வாக என்ஜினீயர் சேட், உதவி நிர்வாக என்ஜினீயர் சம்பத்குமார், இளநிலை என்ஜினீயர் சம்பத்குமார், உதவி என்ஜினீயர் ஜெயசுதா, தாசில்தார் சுமதி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, பொன்னேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அடங்கிய குழுவினர். மெதூர் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பழவேற்காடு மற்றும் 22 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட பகுதி 3 தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆழ்துளையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு, கீழ்நிலை நீர்த்தொட்டியில் சேமிக்கப்படும் நீரின் அளவு, இங்கிருந்து வெளியேற்றும் நீரின் அளவு ஆகிய விவரங்களை மின்மோட்டார் இயக்குபவரிடம் கேட்டறிந்தனர். பின்னர் பழவேற்காடு கிராமத்திற்கு சென்று கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 22 கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கபடுவதை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதனையடுத்து பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கூட்டு குடிநீர் குழாய் செல்லும் பகுதியை பார்வையிட்டு குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.


Next Story