புதுவையில் வசிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகளில் பெயர்கள் நீக்கப்படும்
புதுவையில் வசிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுவையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன்கார்டுகளில் இடம்பெற்றுள்ள ஒரு சில உறுப்பினர்கள் புதுச்சேரியில் வசிக்கவில்லை என குடிமை பொருள் வழங்கல் துறைக்கு தெரியவந்துள்ளது. இந்த நபர்களின் விவரம் பட்டியலிட்டு பொதுமக்களின் பார்வைக்கு சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் துறையின் இணையதள முகவரியான dcsca.puducherry.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான உறுப்பினர்களின் பெயரை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு குடும்ப தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வருகிற 31–ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் புதுச்சேரியில் வசிப்பதற்கான ஆதாரங்களை குடிமை பொருள் வழங்கல் துறையில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த நபர்களின் பெயர்கள் ரேஷன்கார்டுகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.