தனியார் ஊறுகாய் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


தனியார் ஊறுகாய் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 9:13 PM GMT)

தனியார் ஊறுகாய் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மணவாசி கிராமம் கோரகுத்தி பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளரிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெள்ளரிக்காய் ஊறுகாய் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக அதை பதப்படுத்தும் பணிக்கு ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

பின்னர் அந்த ரசாயன திரவங்களின் கழிவுகளை அப்பகுதியிலேயே பூமியில் விடுவதால் அவை நிலத்தில் ஊடுருவி அருகில் உள்ள விவாசய நிலங்களும், குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நீரும் பாதிப்படைவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த தொழிற்சாலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி 16-ந் தேதி தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், 25-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 30-ந் தேதி தொழிற்சாலைக்கு பூட்டுப் போடும் போராட்டமும் நடத்தப் போவதாக அப் பகுதி பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையல் நேற்று காலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நத்தமேடு, கோரகுத்தி, கருப்பூர், மேட்டாகிணம், மணவாசி, சங்கரமலைப்பட்டி, மலைப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தொழிற் சாலையை நோக்கி வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமையிலான போலீசார் தொழிற்சாலைக்கு அருகிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தொழிற் சாலைக்கு எதிராகவும், அதை இங்கு இருந்து அகற்றவும் கோரி கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்திய அவர்கள், குளித்தலை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு அதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.


Next Story