“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்” கமல்ஹாசன் பேச்சு


“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்” கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2018 11:15 PM GMT (Updated: 16 May 2018 9:13 PM GMT)

“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்” என நாகர்கோவிலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நாகர்கோவில்,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். நேற்று மாலையில் நாகர்கோவில் வந்த அவர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திறந்த வேனில் வந்த அவரை காண ஏராளமானவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

நான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. சிறுவயதில் டி.கே.சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.

இந்த கூட்டத்தின் மத்தியில் நீங்கள் பேசுவீர்களா? என 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு இருந்தால், ஆம், சினிமா நடிகனாக பேசுவேன் என சொல்லி இருப்பேன். ஆனால் நான் இப்போது சினிமாக்காரன் அல்ல. அரசியல்வாதியாக வந்திருக்கிறேன். உங்கள் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்.

தமிழகம் புது யுகத்தை நோக்கி நகர்கிறது. நகர்த்தும் கரங்கள் உங்களுடையது. உங்கள் கரங்களின் உதவியால் நாளை நமதாக அமையும். இந்த வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொண்டு வந்தேன். மக்கள் நீதி மய்யம் என்ன செய்துவிடும்? என இப்போது சொல்ல முடியாது. யாருக்காக செய்யும் என்றால் உங்களை சுட்டிக்காட்ட முடியும். மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்.

நீங்கள் மவுனமாக இருந்ததால் தான் நானும் மவுனமாக இருந்தேன். தற்போது மவுனம் கலைந்துவிட்டது. எல்லோரும் பேசும் மேடையாக இது அமையும். உங்கள் அன்பு, ஆதங்கம் எனக்கு புரிகிறது. கிராம சபையில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினராக இருப்பவர்கள் ‘மய்யம் விசில்‘ என்ற செயலியை உங்கள் போனில் ஏற்படுத்தி கொள்ளுங்கள். இங்கு பேச நினைப்பதை விவரமாக நீங்கள் ‘விசில்‘ செயலியில் சொல்லலாம்.

இந்த மேடையிலேயே எல்லாவற்றையும் பேசி முடிப்பது நடக்கும் காரியம் அல்ல. உங்கள் குறைகளை கேட்பது என் கடமை.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் அவர், கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story