தர்ஷன் புட்டண்ணய்யா தோல்வியால் அதிர்ச்சியில் விவசாயிகள் சங்கத்தினர்


தர்ஷன் புட்டண்ணய்யா தோல்வியால் அதிர்ச்சியில் விவசாயிகள் சங்கத்தினர்
x
தினத்தந்தி 16 May 2018 10:15 PM GMT (Updated: 16 May 2018 10:06 PM GMT)

மேல்கோட்டை தொகுதியில் தர்ஷன் புட்டண்ணய்யா தோல்வி அடைந்ததால், விவசாயிகள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மண்டியா,

மேல்கோட்டை தொகுதியில் தர்ஷன் புட்டண்ணய்யா தோல்வி அடைந்ததால், விவசாயிகள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமாக இருந்து வந்தவர் புட்டண்ணய்யா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து மேல்கோட்டை தொகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டணய்யாவை வேட்பாளர்காக தேர்வு செய்து தேர்தலில் நிறுத்தினர். அவர் சுவரஜ் இந்தியா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.

மேலும் அவருக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் தர்ஷன் புட்டண்ணய்யா, ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் புட்டராஜு மற்றும் பா.ஜனதா வேட்பாளர் ஆகியோருக்கு மேல்கோட்டை தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புட்டராஜு தேர்தலில் வெற்றிபெற்றார். இதனால் தர்ஷன் புட்டண்ணய்யாவின் ஆதரவாளர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், “புட்டண்ணய்யா விவசாய சங்கத்தலைவராக மட்டுமல்லாமல், தொடர்ந்து 2 முறை இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு அந்த இடத்தை தர்ஷன் புட்டண்ணய்யாவால் நிரப்ப முயன்றோம். அதன்படி தர்ஷன் புட்டண்ணய்யாவும் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்தும் அவருக்கு ஆதரவு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அவருடைய தோல்வி எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இத்தொகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நான் நல்லது செய்வேன் என்று தர்ஷன் புட்டண்ணய்யா தனது தந்தை புட்டண்ணய்யாவின் சமாதியில் வைத்து சத்தியம் செய்துள்ளார். அதனால் அவர் மீண்டும் இங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்” என்று கூறினர்.

Next Story