எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார்


எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 17 May 2018 5:00 AM IST (Updated: 17 May 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார், மேலும் அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும்படி பா.ஜனதா சட்டசபை கட்சி தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று அழைப்பு விடுத்தார். அதோடு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் கொடுத்து உள்ளார். அதன்படி முதல்-மந்திரியாக எடியூரப்பா இன்று(வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார்.

224 உறுப்பினர் களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகியவற்றை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 37 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார் கள். இதனால் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

இந்த நிலையில் அரசியலில் திடீர் திருப்பமாக ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனிடையே சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக நேற்று தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா நேற்று கவர்னரை நேரில் சந்தித்து, பா.ஜனதாவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் கொடுத்தார். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) அணிக்கு தான் பெரும்பான்மை உள்ளது.

இந்தநிலையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க கவர்னர் யாருக்கு அழைப்பு விடுப்பார் என்று பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து கவர்னர் வஜூபாய் வாலா சட்ட ஆலோசனை பெற்றார். அப்போது 2-வது, 3-வது நிலையில் வெற்றி பெற்ற கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், அதிக இடங் களில் வெற்றி பெற்ற கட்சிக்கு, ஆட்சி அமைக்க அனுமதி வழங்கலாம் என்று சட்ட வல்லுனர்கள் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.

அதன்படி பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளார்.

பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பெங்களூருவில் நேற்று இரவு நிருபர்களை சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார். முதலில் எடியூரப்பா மட்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்றும், மெஜாரிட்டியை நிரூபித்த பிறகு முழுமையான அரசு பதவி ஏற்கும் என்றும் முரளிதரராவ் தெரிவித்தார்.


Next Story