அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை - முதன்மை கல்வி அதிகாரி


அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை - முதன்மை கல்வி அதிகாரி
x
தினத்தந்தி 16 May 2018 11:24 PM GMT (Updated: 16 May 2018 11:24 PM GMT)

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

சேலம்,

மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்ததையடுத்து அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்தார்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று வெளியிடப்பட்டன. இதில் சேலம் மாவட்டம் 91.52 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 1.37 சதவீதம் குறைவாகும். இதனால் வருகிற ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதை அதிகரிக்க மாவட்ட கலெக்டர் ரோகிணி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். பல அரசு பள்ளிகளில் வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை விரைவில் எடுப்போம். மேலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளின் வருகையை 100 சதவீதமாக்க தீவிர முயற்சியில் ஈடுபடுவோம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்க்கல்வியில் என்ன பாடம் எடுத்து படித்தால் பிளஸ்-2 தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்று கவுன்சிலிங் கொடுக்கப்படும். ஆனால் இதை அவர்களுக்கு கட்டாயப்படுத்த மாட்டோம். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ‘நீட்‘ தேர்வில் நல்ல தேர்ச்சி கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story