புன்னகாயலில் பரபரப்பு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை செயலர் மீண்டும் பணியில் சேர்வதற்கு எதிர்ப்பு


புன்னகாயலில் பரபரப்பு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை செயலர் மீண்டும் பணியில் சேர்வதற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2018 2:00 AM IST (Updated: 17 May 2018 8:28 PM IST)
t-max-icont-min-icon

புன்னகாயலில் கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆறுமுகநேரி, 

புன்னகாயலில் கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

புன்னகாயல் பஞ்சாயத்தில் செயலராக இருப்பவர் லூபர்ஷா. இவர் மீது புன்னகாயல் ஊர்க்கமிட்டியினர் ஊழல் புகார் தெரிவித்திருந்த நிலையில், ஊர்க்கமிட்டி நிர்வாகிகள் மீது அவர் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பின்னர் விடுப்பில் சென்ற அவர் நேற்று மீண்டும் வேலையில் சேர்வதற்காக புன்னகாயல் வருவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து புன்னகாயல் ஊர்க்கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் புன்னகாயல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, லூபர்ஷா மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமென்றும், விசாரணை முடியும் முன்பு அவர் பணியில் சேரக்கூடாது எனவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் பொன்செல்வி மற்றும் அதிகாரிகள், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான லூபர்ஷா மீண்டும் 15 நாட்கள் விடுப்பில் சென்றிருப்பதாகவும், அவர் இப்போது பணியில் சேரப்போவதில்லை என்றும் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஊர்க்கமிட்டி கூட்டம்

அதன் பின்னர் புன்னகாயல் ஊர்க்கமிட்டியின் சிறப்புக்கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில், லூபர்ஷா மீதான புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென்றும், அதன் பின்னர், தகுந்த நபரை பஞ்சாயத்து செயலராக நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட கூடாது என்பதற்காக தற்போது புன்னகாயல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.


Next Story