ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை


ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 7:33 PM GMT)

ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் அங்கிருந்த பள்ளி வாகனங்களுக்குள் சென்று மாணவ-மாணவிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா, சிறுவர்கள் ஏறுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டிகள் உள்ளதா, அவசர கால வழி உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளிகளில் மொத்தம் 1,222 பள்ளி வாகனங்கள் உள்ளது. இந்த பள்ளி வாகனங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திருவள்ளூர், திருத்தணி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அப்போது கலெக்டர் தலைமையில் ஆர்.டி.ஓ, துணை போலீஸ் சூப்பிரண்டு, முதன்மை கல்வி அலுவலர், போக்குவரத்து ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிப்பார்கள்.

அதனை அவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சரிசெய்து மீண்டும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாத பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாரபோக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story