14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கம்


14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 7:49 PM GMT)

காரைக்குடி தலைமை அஞ்சல் கோட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கப்பட்டுஉள்ளது என்று காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி

காரைக்குடி தபால் நிலைய கோட்டக்கண்காணிப்பாளர் மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய அஞ்சல்துறை சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல சிறந்த திட்டங்களை மத்திய அரசின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், அஞ்சல்துறைக்கும் நெருக்கம் அதிகரித்து உள்ளது.

தற்போது காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் காரைக்குடி, தேவகோட்டை தலைமை அஞ்சலகங்கள், தேவகோட்டை, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர், மானகிரி, கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை, சிங்கம்புணரி, உலகம்பட்டி துணை அஞ்சலகங்கள் ஆகிய 14 அஞ்சலகங்களில் தற்போது ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் புதிதாக ஆதார் கார்டு எடுக்கவும், முன்னதாக எடுக்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் பிழைகளை திருத்தம் செய்யவும் பொதுமக்களுக்கு வசதி செய்துகொடுக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு புதிய ஆதார் கார்டு எடுப்பதற்கு பொதுமக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஆதார் கார்டு திருத்தங்களுக்கு ரூ.25 மற்றும் சேவைக்கட்டணமாக ரூ.5 சேர்த்து மொத்தம் ரூ. 30 செலுத்த வேண்டும்.

இதுதவிர ஆதார் கார்டு கலரில் நகல் எடுப்பதற்கு ரூ.24 மற்றும் கருப்பு வெள்ளையில் எடுப்பதற்கு ரூ.12-ம் செலுத்த வேண்டும். இது தவிர கடந்த 15-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதன்முதலாக தேவகோட்டை தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் எடுப்பதற்கு மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தேவையில்லை.

தற்போது அஞ்சலகங்கள் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இதில் சேமிப்பு வங்கி கணக்கு தொடங்குவதற்கு ரூ.50 போதுமானதாகும். இதற்கு ஏ.டி.எம். கார்டு உடனடியாக வழங்கப்படும். தற்போது அஞ்சலகத்தில் வந்துள்ள விரைவுத் தபால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இச்சேவை மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வணிக மக்களுக்கு காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் எல்.இ.டி. மூலம் தங்களது நிறுவன விளம்பரங்களை விளம்பரம் செய்து கொள்ளும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர செல்வ மகள் மற்றும் மகன் சேமிப்பு திட்டம், தொடர் வைப்புக் கணக்கு, குறித்தகால வைப்புக் கணக்கு, மாதாந்திர வருமானத் திட்டம், கிஷான் விகாஷ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story