என்.எல்.சி. அனல் மின்நிலையத்திலநூதனமுறையில் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது


என்.எல்.சி. அனல் மின்நிலையத்திலநூதனமுறையில் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 8:03 PM GMT)

என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் இருந்து நூதன முறையில் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெய்வேலி

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவன 2-வது அனல் மின்நிலையத்தில் இருந்து குப்பைகள் மற்றும் கழிவுபொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் வெளியே புறப்பட்டது. அந்த லாரி மீது மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த லாரியை மடக்கி பாதுகாப்பு படைவீரர்கள் சோதனை செய்தனர்.

அப்போது லாரியின் மேற் பகுதியில் இருந்த குப்பைகள் மற்றும் கழிவுபொருட்களை அகற்றி பார்த்தபோது, இரும்பு பொருட்கள் இருந்தன. உடனே லாரியில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படைவீரர்கள் பிடித்தனர். மேலும் லாரியில் இருந்த தனசிங் உள்பட 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட நபரை தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்த சேகர் மகன் திருமுருகன்(வயது 24) என்பதும், திருமுருகன், தனசிங் உள்பட 4 பேர் சேர்ந்து 2-வது அனல் மின்நிலையத்தில் இரும்பு பொருட்களை திருடியதும், அதனை லாரியின் கீழ்பகுதியில் வைத்து அதன் மீது குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை போட்டு மறைத்து நூதன முறையில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து 2-வது அனல் மின்நிலைய கூடுதல் துணை பொதுமேலாளர் கிரிதர் தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தனசிங் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story