நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர்
வேப்பூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 40). விவசாயி. இவருடைய மனைவி தேவகி. இவர்களுக்கு சுரேஷ், சதீஷ், நவீன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். சந்திர சேகர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். எனவே பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருமாறு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சந்திரசேகர் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு வீடு கட்டிக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சந்திரசேகர் நேற்று காலையில் தனது குடும்பத்துடன் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அலுவலகத்திற்குள் சென்று, வீடு கேட்டு மனு கொடுத்திருந்த மனுவின் தற்போதைய நிலை என்ன? என்று அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ஊராட்சி செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.
இதனால் மனமுடைந்த சந்திரசேகர், திடீரென தான்கொண்டு வந்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் கேனை வெளியே எடுத்தார். பின்னர், அதனை திறந்து தனது உடலில் ஊற்றினார். தொடர்ந்து அருகில் நின்றுகொண்டிருந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது ஊற்ற முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், சந்திரசேகரை தடுத்தனர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ் அவரிடம் விசாரித்தார்.
அப்போது சந்திரசேகர், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருமாறு மனு கொடுத்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டால், ஊராட்சி செயலாளரிடம் கேட்குமாறு கூறுகிறார்கள். அவரிடம் கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பேசுங்கள் என்று கூறுகிறார். இவ்வாறு என்னை அங்கும், இங்குமாக அலைக்கழிக்கிறார்கள் என்றார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், நீங்கள் ஏற்கனவே கொடுத்த மனுவின் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து சந்திரசேகர் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story