திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவது தவிர்ப்பு


திருப்பரங்குன்றம் கோவிலில்  பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவது தவிர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2018 2:52 AM IST (Updated: 18 May 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் 7 இடங்களில் அணையா விளக்குகள் வைக்கப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். நெய் விளக்கு விற்பனை உரிம ஏலத்தை தனியார் ஏற்றிருந்த நிலையில் 2013-ம் ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகம நேரடியாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நெய் விளக்கு விற்பனையை செய்து வந்தது. இதன் மூலம் கோவிலுக்கு பல மடங்கு வருமானம் கிடைத்ததோடு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து திருப்பரங்குன்றம் கோவிலில் நெய் விளக்கு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி கோவிவில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு அதில் பக்தர்கள் நெய் விட்டு வழிபட ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்து கூறுகையில், சராசரியாக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையா (வாடா) விளக்குகள் 7 இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் வாடா விளக்குகள் வைக்கப்படும் இதே போல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலிலும் வைக்கப்படும் என்றார்.

அணையா விளக்குகள் பயன்படுத்தும் பட்சத்தில் அகல் விளக்கில் நெய் விளக்கு ஏற்றுவது முழுமையாக தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

Next Story