காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை


காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

கெலமங்கலம் அருகே காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா என்கிற சிவப்பா (வயது 30). கட்டிட மேஸ்திரியான இவரும், அதே பகுதியை சேர்ந்த சியாமளா என்கிற சாரதா(22) என்பவரும் காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். சிவாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 9.11.2014-ம் ஆண்டு குடிபோதையில் வந்த சிவா மனைவி சியாமளாவிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த சிவா, வீட்டில் இருந்த ஊதுகுழலால், தனது மனைவி சியாமளாவின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கிய அவரை மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி மனைவியை கொலை செய்த சிவாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத் தொடர்ந்து சிவாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story