திருச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனுடன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்


திருச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனுடன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

கணவரின் 2-வது திருமணத்தை தடுக்கக்கோரி திருச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 5 வயது மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருச்செந்துறை பகுதியை சேர்ந்தவர் சத்யா(வயது 33). இவர் நேற்று காலை தனது மகனுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அங்கு சென்று சத்யாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருமணத்தை தடுக்க கோரிக்கை

எனக்கும், ஆறுமுகம் என்பவருக்கும் திருமணமாகி வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதன்பிறகு அவருக்கும், எனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன். அப்போது நான் ஒரு மருந்துகடையில் பணியாற்றி வந்தபோது, அங்கு வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்ததின்பேரில், கடந்த 2008-ம் ஆண்டு சமயபுரத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது.அதன்பிறகு நானும், வெங்கடேசும் உறையூரில் வீடு எடுத்து தங்கி இருந்தோம். இந்தநிலையில் என் கணவர் வெங்கடேசுக்கு அவரது வீட்டில் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். இது தொடர்பாக அவர் வீட்டுக்கு சென்று கேட்டபோது, என்னை திட்டி வெளியே தள்ளிவிட்டார்கள். மேலும், என்னையும், எனது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். ஆகவே இது குறித்து விசாரித்து எனது கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார். 

Next Story