அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி


அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 18 May 2018 12:03 AM GMT (Updated: 18 May 2018 12:03 AM GMT)

அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. வரதராஜபுரம், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டது.

அதேபோல் அனகாபுத்தூர் பகுதியிலும் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆனால் கோர்ட்டு வழக்குகள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் பள்ளி தேர்வு பாதிக்கப்படும் என பொதுமக்கள் விடுத்த வேண்டுகோள் காரணமாக அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற வீடுகள் தவிர மற்ற வீடுகளை இடித்து அகற்றும் பணிக்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதில் மொத்தம் 676 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அப்புறப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா, தாய்மூகாம்பிகை நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.

காயிதேமில்லத் நகரில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கு நோன்பு தொடங்கி உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்றனர். இதையடுத்து மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், கோர்ட்டில் தடை உத்தரவு உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதையடுத்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சங்கர் நகர் போலீசார் பொதுமக்கள் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக மாற்று இடம் பெற்றுச்சென்ற 8 பேர் மற்றும் வாடகை வீடுகளில் இருந்து காலி செய்து சென்றவர்கள் என 29 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Next Story