21-ந்தேதி முதல் கூட்டுறவு சங்க பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு


21-ந்தேதி முதல் கூட்டுறவு சங்க பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 18 May 2018 12:05 AM GMT (Updated: 18 May 2018 12:05 AM GMT)

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வருகிற 21-ந்தேதி முதல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

தமிழகத்தில் தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் செயலாளர்கள் மூலம் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சில சங்கங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு, சங்கங்களின் செயல்பாட்டை உறுதி செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் சங்க நிர்வாகம் முழுமையாக முடங்கிய நிலையில் உள்ளதால், விவசாயிகளுக்கு வேளாண்மை கடன்கள் வழங்குவது முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்துள்ள வைப்புத் தொகைகளை திரும்ப பெற இயலாமல் பெருத்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணங்கள் செலுத்த பணம் எடுக்க இயலாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பணி நிறைவடைந்த பணியாளர்கள், தலைமை பொறுப்பாளர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் முக்கிய பணிகளான ஆண்டு இறுதி கணக்கு முடிக்கப்பட்டும், இருப்பு பரிசோதனை போன்றவற்றில் கையெழுத்து செய்ய நிர்வாகிகள் இல்லாமல் ஆண்டு கணக்கு முடிக்காமல் தொடர் சேவையை மக்களுக்கு வழங்குவதில் சிரமம் உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வருகிற 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் அனைத்து பணியாளர்களும் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் எங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story