சேலத்தில் பஞ்சு குடோன் தீப்பிடித்து எரிந்து சேதம்


சேலத்தில் பஞ்சு குடோன் தீப்பிடித்து எரிந்து சேதம்
x
தினத்தந்தி 18 May 2018 12:17 AM GMT (Updated: 18 May 2018 12:17 AM GMT)

சேலத்தில் பஞ்சு குடோன் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

சேலம்,

சேலம் நெத்திமேடு இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). இவர் அந்த பகுதியில் கழிவு பஞ்சுகளை சுத்தம் செய்து அதில் இருந்து மெத்தை, தலையணை தயாரித்து சேலம், நாமக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஊழியர்கள் பலர் தங்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடோனில் ஒரு அறையில் உள்ள கழிவு பஞ்சு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள,மள வென பல இடங்களில் பரவியது. இதனால் குடோன் முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.

இதை பார்த்த ஊழியர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஞ்சு என்பதால் விரைவில் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஞ்சு குடோன் எரிந்து சேதம் அடைந்தது. பஞ்சு குடோன் அருகே சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடித்துள்ளது. இதில் இருந்து வெளியான தீப்பொறி பஞ்சு மீது விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story