நாங்குநேரி ஜமாபந்தியில் 82 பேருக்கு ரூ.3¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்
நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 82 பேர்களுக்கு ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
நெல்லை,
நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 82 பேர்களுக்கு ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
ஜமாபந்தி தொடக்கம்நெல்லை மாவட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாயத் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சியான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நாங்குநேரி தாலுகா ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் சந்தீப்நந்தூரி இருந்து ஜமாபந்தியை தொடங்கி வைத்தார்.
இதில் களக்காடு குறு வட்டத்தை சேர்ந்த கள்ளிகுளம், கீழகருவேலன்குளம், களக்காடு, வடகரை, பத்மனேரி, பத்தை, வடமலைசமுத்திரம் மற்றும் இடையன்குளம் கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இந்த பகுதி கிராம கணக்கு புத்தகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நலத்திட்ட உதவிகள்இதைத்தொடர்ந்து 18 பேர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 20 பேர்களுக்கு ஸ்மார்ட் கார்டு களையும், 21 பேர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவினையும், 23 பேர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் 82 பேர்களுக்கு ரூ.3 லட்சத்து 71 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர்கள் மயில், லட்சுமிபிரியா, வேளாண்மை இணை இயக்குநர் செந்தில்வேல்முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கலெக்டர் அலுவலக மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தாலுகாபாளையங்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் இருந்து ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் தாசில்தார்கள் கந்தசாமி, பால்துரை, துணைதாசில்தார்கள் சுப்பு, விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள 15 தாலுகா அலுவலகத்திலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இந்த ஜமாபந்தியில் பட்டா மாற்றம், கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டல், நிலத்தை சர்வே செய்து தரகேட்டல், புதிய ரேஷன்கார்டு கேட்டல், இலவச வீட்டுமனை பட்டா கேட்டல் குறித்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.