நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 4:30 AM IST (Updated: 19 May 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்,

ஆதித்தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள நாராயணபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் ஆதித்தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண்ணின் குடும்ப பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க சம்பந்தப்பட்ட பெண்ணுடன் சென்றுள்ளார்.

அப்போது போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்காமல், இளங்கோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தலைவர் ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுச்செயலாளர் இளங்கோவை விடுதலை செய்யக்கோரியும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். குடும்ப பிரச்சினை தொடர்பாக ஒரு பெண்ணோடு புகார் அளிக்கச் சென்ற இளங்கோவை, போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞரணி துணை செயலாளர் தனபால், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த 41 பேரை நல்லிப்பாளையம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story