பிளஸ்-2 தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி


பிளஸ்-2 தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி
x
தினத்தந்தி 19 May 2018 4:30 AM IST (Updated: 19 May 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறினார்.

கிருஷ்ணகிரி,

பிளஸ்-2 தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 29 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளி ஆகும். ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை என்று ஒரு தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த பள்ளிக்கு தகுதி உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நிரந்தர ஆசிரியர்கள் அல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் சிலரும் பணியில் உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் வருத்தமளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற மொழி அரசு மேல்நிலைப்பள்ளி மொத்தம் 4 இயங்கி வருகின்றன.

புக்கசாகரம் பள்ளி 86 சதவீத தேர்ச்சியும், நல்லூர் பள்ளி 90 சதவீதமும், மதகொண்டப்பள்ளி 63 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தான் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த பள்ளியில் தெலுங்கு பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 29 பேரில், 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

இயற்பியல் பாடத்தில் 29 பேரில், 2 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். உயிரியல் பாடத்தில் 18 பேரில், 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 11 பேரில் 10 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். வேதியியல் பாடத்தில் 29 பேரில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தேர்ச்சி குறைவாக கொடுத்துள்ள ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்களின் விளக்கத்தை பெற்ற பிறகு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஓசூர் கல்வி மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் குறைவாக உள்ளது. வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story