ஓசூர் அருகே ரவுடி கொலையில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூர் அருகே ரவுடி கொலையில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 May 2018 11:15 PM GMT (Updated: 18 May 2018 8:24 PM GMT)

ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

ஓசூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். விசாரணையில் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி பக்கமுள்ளது ஒட்டர்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்ன தாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட மொத்தம் 3 கொலை வழக்குகள் உள்ளன. இவர் சூளகிரி அருகே அட்டகுறுக்கியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் கம்பெனியில், வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கட்ராஜ், அவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த நாகேஷ் (20), மாதேஷ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் காமன்தொட்டி பாலம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், காரை மோட்டார்சைக்கிள் மீது மோதினார்கள்.

இதில் நிலை குலைந்து விழுந்த வெங்கட்ராஜை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர். நாகேஷ், மாதேஷ் ஆகிய 2 பேரும் லேசான வெட்டுக்காயங்களுடன் தப்பினர். வெங்கட்ராஜை கொன்ற கொலையாளிகள் காரை அந்த இடத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:-

3 கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கட்ராஜ் ரவுடி ஆவார். போலீசாரின் சரித்திர பதிவேட்டில் அவரது பெயர் உள்ளது. இவர் அட்டகுறுக்கியில் உள்ள கிரானைட் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அதே ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த மாதப்பா என்பவரின் மகன் கேசவன் (26) என்பவர், வேறு ஒரு நபருக்கு அந்த காண்டிராக்ட்டை கொடுக்க கூறினார்.

இதற்கு வெங்கட்ராஜ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கட்ராஜ்-கேசவன் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கேசவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெங்கட்ராஜை தீர்த்து கட்ட திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வெங்கட்ராஜ் சென்று கொண்டிருந்த போது அவரை கேசவனின் கூட்டாளிகள் காரால் மோதி சரமாரியாக வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலையில் கேசவன், அவரது தம்பி சந்தோஷ் (23), கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லைச் சேர்ந்த பாலாஜி (25), ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த எர்ர முனியப்பா என்பவரின் மகன் மாதேஸ்வரன் (27), அவரது சகோதரர் மல்லே கவுடு ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் அதே தனியார் கிரானைட் நிறுவனத்தில் கொலையுண்ட வெங்கட்ராஜூடன் சேர்ந்து வேலை பார்த்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை காரணமாக ஒட்டர்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பதற்றமாக காணப்பட்டது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள். கொலையாளிகள் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகே கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Next Story