பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 3:57 AM IST (Updated: 19 May 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி,

என்.எல்.சி.யில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. இன்கோசர்வ் சொசைட்டி தேர்தலை நடத்த வேண்டும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பஞ்சப்படி மற்றும் ஊதிய உயர்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.

என்.எல்.சி.க்கு வீடு நிலம் கொடுத்த 41 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மீண்டும் சுரங்கம் 1 ஏ-வில் மாதம் 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைவர் அந்தோணி செல்வராஜ், செயலாளர் செல்வமணி, பொருளாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு செயலாளர் சேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். முடிவில் பிரசார செயலாளர் முனியன் நன்றி கூறினார். 

Next Story