கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்


கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2018 10:27 PM GMT (Updated: 18 May 2018 10:27 PM GMT)

விழுப்புரத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக மாவட்டந்தோறும் அரசுத்துறை அலுவலர்களுடன் கவர்னர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருவதாக கூறி, அவர் சுற்றுப்பயணம் செல்லும் மாவட்டங்களில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கவர்னரின் வருகையை கண்டித்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் காலை 10 மணி முதல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு வரத்தொடங்கினர். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்குள் காரில் கவர்னர் செல்லும் சமயத்தில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முடிவு செய்து திரண்டனர்.

இது பற்றி அறிந்ததும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், ‘பேரிகார்டு’ மூலம் பெருந்திட்ட வளாகத்தின் முன்பு தடுப்பு அமைத்தனர்.

காலை 11 மணியளவில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், ராதாமணி, மாசிலாமணி, உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் தமிழ்மாறன், நகர செயலாளர்கள் இரணியன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தவாறும், கையில் கருப்புக்கொடி ஏந்தியபடியும் கவர்னரின் ஆய்வுப்பணியை கண்டித்தும், திரும்பி செல்ல வலியுறுத்தியும், மத்திய அரசு கவர்னரை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

இதனிடையே கவர்னர் பன்வாரிலால் புரோகித், விழுப்புரம் சுற்றுலா மாளிகைக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது மதியம் 1 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 415 பேரை போலீசார் கைது செய்து தனியார் பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், கவர்னர் ஆய்வுப்பணியை முடித்துவிட்டு விழுப்புரத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு சென்றதும், கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story