விழுப்புரம் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2018 10:27 PM GMT (Updated: 18 May 2018 10:27 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றார்.

விழுப்புரம்,

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அலுவல் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மாவட்டந்தோறும் சென்று ஆய்வுப்பணியை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

கவர்னரின் இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கண்டித்தும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பொருட்படுத்தாத கவர்னர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.

இதற்காக அவர், நேற்று காலை 9.15 மணிக்கு சென்னை ராஜ்பவனில் இருந்து கார் மூலம் விழுப்புரத்திற்கு புறப்பட்டார். மாவட்ட எல்லையான ஓங்கூருக்கு அவர் 10.45 மணிக்கு வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் திண்டிவனம் வழியாக வானூர் தாலுகா பூத்துறை கிராமத்திற்கு காலை 11.35 மணிக்கு வந்தார். அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வரவேற்பை பெற்ற கவர்னர், அதே கிராமத்தில் உள்ள புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்படும் கோடை கால பயிற்சியை பற்றி கேட்டறிந்தார். அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகளையும் அவர் ரசித்து பார்த்தார்.

அதன் பிறகு மாணவ- மாணவிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கிராமமும் நாடும் முன்னேறுவது மாணவர்களிடையே உள்ளது. ஆன்மிகத்தின் அடிப்படையில் சமூகமும் நாடும் வளர வேண்டும். மக்களிடையே சக்தி உள்ளது. அதனை பக்குவப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும். தமிழ் எளிமையான மொழி. எனவே அதை நான் கற்க விரும்புகிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பூத்துறையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை, கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி வழியாக விழுப்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு மதியம் 2 மணிக்கு கவர்னர் வந்தடைந்தார். அங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கலெக்டர் சுப்பிரமணியன், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு சுற்றுலா மாளிகையில் அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, மதியம் 2.45 மணிக்கு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் நேரு, துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள், அந்த திட்டப்பணிகளை செயல்படுத்தும் விதம், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரம் ஆகியவவை பற்றி அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டறிந்தார்.

அதற்கு அரசு திட்டப்பணிகளின் முன்னேற்ற விவரம் குறித்து வீடியோ காட்சி மூலம் கவர்னரிடம் அதிகாரிகள் விவரித்து எடுத்துக்கூறினர். இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 146 பேர் மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்ற கவர்னர், அந்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்ட கவர்னர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு தூய்மைப்பணி மேற்கொண்டதோடு துப்புரவு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர், திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை, பஸ் பயணிகளுக்கு கவர்னர் வழங்கினார். அதோடு ஆட்டோக்கள், பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

இப்பணியை முடித்துக்கொண்டு மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு சென்றார். அங்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடந்த தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உறுதிமொழியை படிக்க அரசு அலுவலர்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றத்தினர், பொதுமக்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதன் பிறகு மாலை 5.55 மணியளவில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ரதம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை கவர்னர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மற்றும் ரதம் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. பின்னர் அரசு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை கவர்னர் பார்வையிட்டார். இந்த ஆய்வுப்பணி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு மாலை 6.05 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து கவர்னர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். கவர்னருடன் அவரது செயலாளர் ராஜகோபால் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் உடன் வந்திருந்தனர்.

Next Story