ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாணாவரம் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மருமகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனப்பாக்கம்,

பாணாவரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 67), ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் அருண்குமார் (31). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அரக்கோணத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் அன்பரசி (28) எம்.பி.ஏ. பட்டதாரி. அருண்குமாரும், அன்பரசியும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருண்குமாருக்கும், அன்பரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் படுக்கை அறைக்கு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து அவர் கதவை திறக்கமுயன்றபோது வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஜன்னலை திறந்துபார்த்தபோது வீட்டு ஹாலில் அன்பரசி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்குமார் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் வந்து வீட்டுக்கதவை திறக்கமுயன்றபோது உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சென்று அன்பரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கமும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து அன்பரசியின் தந்தை செல்வராஜ் பாணாவரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அருண்குமார் அடிக்கடி நகை, பணம் கேட்டு அன்பரசியை கொடுமைப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவருடைய வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்றும் கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அன்பரசிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவுக்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story