அடிப்படை வசதி இல்லாத சோழவந்தான் ரெயில் நிலையம்


அடிப்படை வசதி இல்லாத சோழவந்தான் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 19 May 2018 4:31 AM IST (Updated: 19 May 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் ரெயில் நிலையம் மதுரை ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக பெரிய ரெயில் நிலையமாக உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு செல்ல தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்பதிவு இடங்களும் நின்று செல்லும் வசதியும் உள்ளது.

இதுபோக தினசரி சோழவந்தானில் இருந்து மதுரைக்கு வேலைக்கு செல்லும் பயணிகளுக்காக திண்டுக்கல் மற்றும் பழனி பாசஞ்சர் ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ரெயில் நிலையம் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இல்லை. சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. தூண் மேடையும் இடிந்து கிடக்கிறது. அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி காணப்படுகிறது.

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் இதுதொடர்பாக கூறியதாவது:-

சோழவந்தான் ரெயில் நிலையம் ஆரம்பித்த நாள் முதலே அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இன்றளவும் நாள்தோறும் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் சோழவந்தானை சேர்ந்த வேலைக்கு செல்வோர், மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பலரும் என அதிக அளவில் ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என பார்த்தால் எதுவும் இல்லை.

அடிப்படை தேவையான குடிநீர், குளியல் அறை மற்றும் இருப்பிட வசதிகள், நடைமேடைகளில் விளக்குகள் என எதுவுமே இல்லை. மேலும் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணியும் நடப்பதில்லை. முக்கிய நடைமேடைகளில் அதிகபட்சம் இரவு நேரங்களில் விளக்குகளையாவது எரிய விடலாம்.

ஆனால் எந்த விளக்குகளையும் போடாமல் ரெயில் வரும் நேரத்தில் 5 நிமிடங்கள் மட்டும் போட்டு அமர்த்தி விடுகிறார்கள்.

இந்த நடைமேடையை அருகிலுள்ள ஆலங்கொட்டாரம் கிராம மக்கள் சோழவந்தான் வந்து செல்ல பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களிடம் அதிக கெடுபிடியாக நடந்து கொள்கிறார்கள். ரெயில் நிலையத்தின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்து தரவேண்டும். இவ்வாறு கூறினர். 

Next Story