வந்தவாசியில் கோவில் வளாகத்தில் கிடந்த வெடி பொருளால் பரபரப்பு


வந்தவாசியில் கோவில் வளாகத்தில் கிடந்த வெடி பொருளால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 May 2018 4:42 AM IST (Updated: 19 May 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் கோவில் வளாகத்தில் கிடந்த வெடி பொருளால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி சாலையில் சத்புத்திரி நாயகி சமேத சுயம்பு ஜலகண்டேஸ்வரர் கோவிலும், ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலும் அடுத்தடுத்து உள்ளது. நேற்று காலை ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் சுற்றி திரியும் மூதாட்டி ஒருவர் அந்த கோவில் வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பொருள் கிடந்ததை பார்த்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அது வெடி பொருள் என்பதும், பந்து வடிவலான ஐஸ்கிரீம் டப்பாவில் வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்தவாசி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொற்செழியன், வந்தவாசி சப் -இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், சம்பத் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து போலீசார் வெடி பொருளை செயல் இழக்க வைக்க தண்ணீர் குடத்தில் போட்டனர்.

அதைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள பட்டாசு வியாபாரி ஒருவரை அழைத்து வந்து வெடிபொருளை காண்பித்து இது எந்தவகையான வெடி என கேட்டதில் அந்த வெடி பொருள் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் சாதாரண ‘அவுட்’ வகை வெடி என வியாபாரி தெரிவித்தார்.

மேலும் கடையில் இருந்து வெவ்வேறு நிறுவனங்களின் பல்வேறு வகையான அவுட் வகை வெடிகள் எடுத்து வரப்பட்டு பிரித்து சோதனை செய்யப்பட்டது. அந்த அவுட் வகை வெடிகளில், கோவிலில் கிடந்தது போல பந்து வடிவிலான ஐஸ்கிரீம் டப்பாவில் வெடி மருந்து நிரப்பப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் கோவிலில் கிடந்த வெடி பொருளையும், கடையில் இருந்து எடுத்துவரப்பட்ட வெடிகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கூறுகையில், ‘கோவில் வளாகத்தில் கிடந்த வெடி பொருள் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழா ஊர்வலம் போன்றவற்றில் விடப்படும் சாதாரண அவுட் வகை வெடியாகும். விடப்பட்டு வெடிக்காத நிலையில் அந்த வெடி கோவில் வளாகத்தில் விழுந்து கிடந்துள்ளது’ என்றார்.

கோவில் வளாகத்தில் விழுந்து கிடந்தது சாதாரண அவுட் வகை வெடி என்பதை அறிந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story