பல்லடம் அருகே பால்பண்ணை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


பல்லடம் அருகே பால்பண்ணை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:30 PM GMT)

பல்லடம் அருகே பால்பண்ணை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல்லடம்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தசெட்டி. இவருடைய மகன் சிவக்குமார்(வயது 24). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள தனியார் பால்பண்ணை ஒன்றில் தங்கி உதவியாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு சென்ற சிவக்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் வேலைக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலையில் உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, தான் தங்கி இருந்த அறைக்கு சிவக்குமார் சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மற்ற ஊழியர்கள் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பல்லடம் போலீசாருக்கும், சிவக்குமாரின் பெற்றோருக்கும் தகவல்கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இடத்தின் அருகே தரையில் பென்சிலால், கன்னட மொழியில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா, அம்மா, அண்ணன், மாமா மஞ்சு ஆகியோருக்கு நன்றி.‘ என்றும் ஆங்கிலத்தில் ‘ஐ லவ் யு ரம்யா, ஐ மிஸ் யு‘ என்றும் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் இவற்றை ஒரு காகிதத்தில் பேனாவால் எழுதி அருகில் உள்ள ஒரு மேஜையிலும் வைத்திருந்தார்.

அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதல் தோல்வியால் சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று உடனடியாக தெரியவில்லை. இதைதொடர்ந்து சிவக்குமாரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பால்பண்ணை ஊழியர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story