ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி நெருக்கடி அளிக்கப்படுவதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இளவரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
பசுமை வீடு கட்டும் திட்டத்தில் உரிய கால அவகாசம் வழங்காமல் விரைந்து வீடு கட்டி முடிக்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட ரூ.20 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. இதனால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு தயங்குகின்றனர். எனவே தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு வழங்கப்படும் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தினை மேற்கொள்ள வசதியாக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.